கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி…….?

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி…….?

      ஒரு ஜென் சீடர் பான்காய் என்கின்ற குருவிடம் சென்று வினயமாகச் சொன்னார் . குருவே, என்னால் என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை . அதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்.

அதற்கு பான்காய் சொன்னார்  “இது மிகவும் ருசியாக இருக்கிறது உன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் காட்டுவாயாக நான் பார்க்கவேண்டும்,” என்றார் . ……

அதற்கு அவன்

“தற்சமயம் என்னிடம் கோபம் இல்லை எனவே என்னால் காட்ட முடியாது.”

அப்படியானால்

“உன்னிடம் இருக்கும் போது நீ அதை கொண்டு வருவாயாக”

அதற்கு அவன்

“என்னால் அதைக் கொண்டு வர முடியாது ஏனென்றால் திடீரென அது ஏற்படுகிறது.  நான் உங்களிடம் வருவதற்குள் அது நிச்சயம் காணாமல் போய்விடும்,” என்று கூறினான்.

குரு சொன்னார்

“அப்படியானால் அது உன்னுடைய உண்மை இயல்பாக இருக்க முடியாது

உண்மை இயல்பாக இருந்ததென்றால் நீ எப்போது வேண்டுமானாலும் அதை என்னிடம் காட்ட முடியும்.

நீ பிறந்தபோது அது இல்லை.

உன் பெற்றோர்கள் அதை உனக்குத் தரவில்லை

எனவே,

அது வெளியில் இருந்துதான் உனக்கு வர வேண்டும்.

நான் உனக்கு ஒன்று சொல்லுகிறேன்

அது உனக்குள் புகும் போதெல்லாம் உன்னை ஒரு குச்சியால் நன்றாக அடிப்பாய்

அந்தக் கோபம் உன்னை விட்டு ஓடும்வரை அடித்துக்கொண்டே இருப்பாய்” என்றார்.

பான் காய் கூறியதை நாம் உற்று நோக்க வேண்டும்.

நாம் கோபத்துடன் பிறக்கவில்லை.

விரல்களைப்போல, விழிகளைப்போல, இதயத்தைப்போல, ஈரலைப்போல

அது நமக்கு ஆடையைப் போல, அணிகலன் போல சீதனமாகவும் தரப்படவில்லை.

உடன் பிறந்தவற்றை வெட்டி எறிவது கடினம்

விரல்களை வெட்டவோ,

தோலைத் துண்டிக்கவோ,

காதுகளை நறுக்கவோ முற்பட்டால்

ஏற்படும் வலி மிகவும் அதிகமாக இருக்கும்.

நம்மோடு பிறக்காதவற்றை வெட்டி எறிவது மிகவும் எளிது.

நாம் அன்போடு பிறந்தோம்,

அன்பு குறைகிறபோதெல்லாம் வெறுப்பு அதிகமாகிறது.

நாம் இனிமையோடு பிறந்தோம்,

இனிமை குறைகிற போதெல்லாம் கசப்பு அதிகமாகிறது.

நாம் மகிழ்ச்சியோடு பிறந்தோம்,

மகிழ்ச்சி குறைகிற போதெல்லாம் கோபம் அதிகமாகிறது.

நாம் திருப்தியோடு பிறந்தோம்,

திருப்தி குறைகிற போதெல்லாம் பொறாமை அதிகமாகிறது.

நாம் நிறைவோடு பிறந்தோம் ,

நிறைவு நீங்குகிற போதெல்லாம் பேராசை ஊற்றெடுக்கிறது.

நம் உண்மை வடிவம் அன்புதானே தவிர கோபம் அல்ல.

நாம் கோபம் புரிகிறபோது அதைக் கட்டுப்படுத்த நினைத்தால்

அது மட்டுப்படுவதற்குப் பதிலாகத் துள்ளிக் குதிக்கிறது

நாம் கோபப்படுகின்றபோது,

நம் கோபத்தைச் சற்று கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும்.

அந்த கோபம் குறிப்பிட்ட நிகழ்வுக்காக ஏற்பட்டதல்ல .

சரம் சரமாக நடந்த பல்வேறு சம்பவங்களில்

நாம் தேக்கி வைத்ததை என்பதை நாம் உணர முடியும்.

கோபத்திற்கான பிராயச்சித்தம் கோபத்தைத் தடை செய்வதல்ல.

மாறாக அதைப் புரிந்து கொள்வது

கோபம் நிகழும்போதெல்லாம்

சுய பரிசோதனை செய்துகொண்டால்

கோபத்தின் வேர்களையே வெட்டி விடமுடியும்.

கோபத்திலிருந்து தப்பிப்பதற்குத் தந்திரங்களும் மந்திரங்களும் உதவாது.

அதைப் புரிந்து கொண்டால்

விரைவிலேயே அதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

 

வாழ்க வளமுடன்!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!