ராமசாமிக்கு மகளிடம் பேசி நீண்ட நாள் ஆனதால் அவர் முதலில் அந்த கடிதத்தை பிரித்து படித்தார். 15 வயது நிரம்பிய அவருடைய மகள். அவளுடைய பள்ளி விடுதியில் இருந்து வந்திருந்தது.
“அன்புள்ள அப்பா ……
அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள். விஞ்ஞானம் முன்னேறி விட்டது. குழந்தைளுக்கும் பெற்றோர்களுக்குமான இடைவெளி பெரிதாகி விட்டது. எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது அப்பா, அம்மா தான் மிக பெரிய Inspiration.
அம்மா சொன்னது உண்மை என்றால் DNA Report வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிருபனமாகிவிடும்.அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அந்நிய பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படும் முன் கடைசியாக ஒரு முறை உங்களை சந்திக்க விரும்பிகிறேன். எனக்கு உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி அழுதுக் கொட்டித் தீர்க்கவேண்டும் போல இருக்கிறது.
இனிமேல் உங்களை அப்பா என உரிமையோடு அழைக்க முடியுமோ? முடியாதோ? தெரியவில்லை. அப்பா என்றால் பாசம். அப்பா என்றால் அன்பு. அப்பா என்றால் திட்டு. அப்பா என்றால் செல்ல சிணுங்கள் என எனக்கு எல்லா முமாய் நீங்கள் தான் இருந்து இருக்கிறீர்கள்.
அம்மாவின் அலட்சியமும், உதாசீனமும் அவரிடம் இருந்து என்னை பிரித்து விட்டது. இதன் காரணமாகவோ என்னவோ எனக்கு உங்கள் மீது பாசம் அதிகம் ஆனது.
என் மீது அலாதியான அன்பையும் பாசத்தையும் வைத்துக்கொண்டும் எப்படி உங்கள் இதயத்தை கல்லாக்கிக் கொண்டு என்னோடு எப்படி பேசாமல் இருந்தீர்கள்? ஏன் பேச மறந்தீர்கள்?
அன்று வீட்டில் நடந்த பெரும் சண்டையில் அம்மா என்னை உங்கள் மகள் இவள் இல்லை என்று அடித்து சொன்னவுடன், “நீ என் பெண் தானே?” என்ற கேள்விகுறியோடு நீங்கள் என்னை நிமிர்ந்து பார்த்தீர்களே! அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இன்றளவும் அதை நினைத்து அழுது கொண்டு தான் இருக்கிறேன்.
ஒருவேளை நீங்கள் தான் என் அப்பாவாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இனி வரும் காலம் முழுவதும் உங்களை விட்டு பிரியாமல் இருப்பேன். அவ்வாறு இருக்க கடவுளை வேண்டிகொள்கிறேன். அதன் பின் என்ன நடந்தாலும் அதை ஏற்றுகொள்ள முயற்சி செய்வேன். உங்கள் பிடிவாதத்தை கைவிட்டுவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?”
எழுதப்பட்டிருந்தது.இதை கேட்டதும் இடி தாக்கியது போல அதிர்ந்து போனார். அவரது கண்ணிலிருந்து அவரை அறியாமல் கண்ணீர் வழிந்தது. கணவன் – மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார், வருந்தினார்.
அவள் வழக்கம் போல விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் போது பழக்கப்பட்ட உருவம் தொலைவில் அமர்ந்திருந்ததை கண்டாள். அருகில் சென்றாள் அது அவளது தந்தை.
அவரை பார்த்தவுடன் அழுதுகொண்டே ஓடிசென்று கட்டி அணைத்துக்கொண்டாள். அவள் அவரிடம், “நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்கவில்லை. நீங்கள் எதையும் கூற வேண்டாம். நான் சிறிது நேரம் உங்களிடம் மனம் விட்டு பேசி விட்டு சென்று” என்று கூறிகொண்டிருக்கும் போதே அவர் அவளது வாயை அடைத்து விட்டு “கண்ணீருடன் நான் உன்னை விட்டு என்றும் பிரியமாட்டேன். நான் தான் உன் அப்பா” என்றார்.
அவளுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் அவளது அப்பாவிடம் நான் கடைசியாக அழுது கொள்கிறேன். அதற்கு பின் நீங்கள் அழ விடமாட்டீர்கள் என்ற புன்னகையுடன் கூடிய அழுகையை அழுத பின் இருவரும் இராமசாமியின் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு சென்று முதல் வேலையாக அந்த D.N.A Report-ஐ படிக்காமலே கிழித்து எரித்து விட்டார்.