“ஒருமாசம், ரெண்டு மாசம்தான் ஆகட்டும்…… இப்ப என்ன கெட்டுபோயிடும்…….”, ஊரடங்குமேல் இருந்த கோபம் தாத்தா மீது இறங்கியது……
“ரெண்டுமாசம் கழிச்சி?…….”, தாத்தா புன்னகையோடு வெற்றிலையை எடுத்தார்……..
“இதெல்லாம் அப்ப செஞ்சிக்கலாம்….”, புத்திசாலிதனமாய் பதில் சொன்னேன்.
தாத்தா வெற்றிலையில் சுண்ணாம்பை தடவியபடியே கேட்டார் “நான் அதைக்கேக்கலப்பா…… ரெண்டு மாசம் கழிச்சி என்ன சாப்பிடுவன்னு கேட்டேன்….”
அதிர்ந்தேன்……
கேள்வி புரிய துவங்கியது.
அம்மி நின்றது…..
“குமாரு…… இன்னிக்கு சாப்பிட்ட கீரை இருபது நாளுக்கு முன்னாடி விதைச்சது. இருபது நாளைக்கு பிறகு கீரை வேணும்னா….. இன்னிக்கு விதைக்கணும். “
“இன்னைக்கு நடவு பண்ணுனாதான் ரெண்டு மாசம் கழிச்சி காய்கறி சாப்பிடமுடியும்.”
“அதனால விவசாயம் மட்டும் நிக்கவே கூடாதுப்பா……”
வெற்றிலையை மெல்ல துவங்கினார். எனக்கு சில விஷயங்கள் புரிய துவங்கியது. ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“சரி…. அப்படி பாடுபட்ட காய்கறி பழத்தையெல்லாம் விற்க படாதபாடு பட வேண்டியிருக்கு. நல்ல விலையும் கிடைக்கல… யாரோ சாப்பிடறதுக்கு….. யாரோ சம்பாதிக்கறதுக்கு நாம ஏன் கஷ்டபடணும்……”, அடுத்த கேள்வி கேட்டேன். தாத்தவின் தோல்வியை எதிர்பார்த்தேன்…….