ஓர் இலையின் பயணம்

ஓர் இலையின் பயணம்
எழுத்தாளர் – யான்தமிழன்

அது ஓர் இலையுதிர் காலம். செம்மை பொழிக்கும் மேகங்களும், வானை அளக்கும் பறவை கூட்டங்களும், காதலால் கொஞ்சி விளையாட….. மையல் கொண்டது வனம். இதற்கு இடையில் ஒரு சலசலப்பு…… வானை முட்டும் ஓர் அழகிய மரம், அந்த மரத்தின் இலைகள் பிரிய போகும் தருணத்தால் அன்பை பரிமாறிகொண்டிருந்த பொழுது எழுந்த சலசலப்பு தான் அது…… உடன் பிறந்த அனைத்து இலைகளும் விடைபெற்று புதியதோர் பயணத்தை மேற்கொண்டன….. அனைத்து இலைகளும் தன் இல்லம் விட்டு தென்றலோடு கரைந்தன…..

அதில் ஒரு இலை மட்டும் மரத்தின் கதகதப்பிலே இருந்தது. (அன்னை மடியில் சொர்க்கம் இருக்கையில் யாருக்கு தான் பிறிவில் ஆசை இருக்கும்) அந்த இலை தன் அன்னை இடம் பல வினாக்களை எழுப்ப…… தன் குஞ்சியின் மழலை மொழி கேட்டு மார்போடு அணைத்தது. அன்னையே நான் எப்போது பயணம் மேற்கொள்வேன் ? நான் செல்ல இருக்கும் உலகம் எப்படி பட்டது? என்று பற்பல வினாக்களை எழுப்பியது………

இப்படியே நாட்கள் ஓடின, ஒரு நாள் இடியும் மின்னலும் காதல் கொண்டு அவளை அனைத்திடவே நாணத்தில கன்னம் சிவந்து ஆனந்த கண்ணீராய் மாறி பொழிந்தது. வீசும் தென்றலும் உரு பெருக புயலாய் மாறியது. இன்று தான் நம் பயணம் என எதிர்பார்ப்பில் காத்திருந்தது அந்த இலை. மழை ஓய்ந்தது, தென்றலும் தன் வீரியத்தை குறைத்து கொண்டது. ஆனாலும் இலையின் பயணம் தொடங்கவில்லை…… ஏமாற்றத்தில் மனம் உடைந்து போனது.

             அப்பொழுது உள்ளம் கொள்ளை கொள்ளும் மித தென்றல் வீச, வளைந்து நெளிந்து வந்த அந்த மழை துளி.. இலை நுனி படவே இலையின் பயணம் தொடங்கியது. எதிர்பார்ப்பும், காணபோகும் காட்சிகளையும், எண்ணி இரவு பகலாய் அந்த இலை பயணம் செய்தது. வானில் இருள் பூண்டது, வெண்ணிலா வெட்க்கத்தில் சிவந்தது, அந்த வெட்க்கத்தை காண முடியாது சூரியனோ அக்னி பிழம்பாய் தவித்தது. தான் காணா விடினும் தன்னை வருத்தி இருளில் மூழ்கி இருளாய் இருந்து அவளை ரசித்தது. இதை கண்ட இலை, நாணம் கொண்டு புன் சிரிப்பு கொண்டது.
                “கனலும் காதல் கொண்டால் அவள் விழியில் தன்னிலை மறப்பது உண்மை போலும்” என முனு முனுத்து கொண்டே அவ்விடம் விட்டு நீங்கியது.

  சற்று தொலைவில், தென்றல் வீச மூங்கில்கள் சேர்ந்து சப்தம் எழுப்ப குயில்கள் கூவ மயில்கள் ஆட, பூக்கள் நாணம் கொண்டு இதழ்கள் விரிக்க, வண்டுகள் ரீங்காரம் இட, இலைகள் காற்றோடு புனர்ந்திட, என்னவன் என்னவளை தாங்குவது போல் நுனிப்புல் பனித்துளியை தாங்கிட……. சிலு சிலுவென தென்றலோடு சலசலவென ராகத்தோடு நீல நிற தேகத்துடன் வளைந்து நெளிந்து வெட்க்கத்தில் மெலிந்து ஆவலில் விரிந்து அவன் கன்னங்களை தழுவி மையம் கொண்டிட ஓர் காதல் உலா அரங்கேறியது. இதை கண்ட அந்த இலை அவ்விடம் விட்டு நீங்க மனம் இல்லாமல் சென்றது. 

       நீண்ட நேரம் பயணம் செய்த காரணமோ ஏனோ, இலை  இளைப்பாற எண்ணியது, ” சற்று இங்கே ஓய்வெடுப்போம் பிறகு பயணிப்போம்” என்று களைத்திருந்த அந்த இலை ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றது. ஒரே சப்தம் அங்கே, விழித்த இலை மழலைகள் ஆடி பாடி மகிழ்ந்திருந்ததை கண்டது, ஓ” இது தான் அந்த சப்தத்திற்கு காரணமோ என எண்ணி கொண்டது. பாண்டி, கில்லி, ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களை விளையாடினர். “இன்பம் கொண்டு மனக்காயங்களை வெல்லலாம்  போலும்” என்ற மன மகிழ்ச்சியுடன் அவ்விடம் விட்டு நீங்கியது இலை. 

               இரண்டு நாள் பயணத்திற்கு பிறகு ஓர் ஊர் தென்பட்டது. அன்று ஆடி பெருக்கு, தெருவெங்கும் வண்ண ஒளிகளாலும் மலர்தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேல தாளங்கள் ஒலிக்க இயல் இசை நாடகங்கள் நடக்க, மங்கையர் ஆட மக்கள் பேரானந்தத்தில் மூழ்கினர். இளம் காளைகள் கன்னிகளை கவர, மல்யுத்தம் ஏறு தழுவுதல் முதலிய வீர விளையாட்டுகளை மேற்கொள்ள இளம் ஜோடிகள் காதலில் மூழ்க, இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த இலை தன்னிலை மறந்து வியந்து திகைத்து நின்றது. 

ஆனால் அந்த இன்பம் நீடிக்க வில்லை, ( வெளிச்சம் என்பது ஒன்று இருந்தால் இருள்  இருப்பது என்பது உன்மை தானே ) அத்தகு இன்பம் மிக்க அந்த இடத்திலும் ஓர் அழு குரல். என்ன  இந்த சப்தம் புதிதாக உள்ளது, இதுவரை நான் கேட்டது இல்லையேஎன எண்ணி கொண்டே சப்தம் வந்த திசை நோக்கியது. 

 தன் பிள்ளைக்கு அரைவயிற்று கஞ்சி கூட ஊட்ட முடியாமல் தவிக்கும் தாயின் அழுகுரல் தான் அது. “மார்பை பிசைந்து பார்த்தேன் உதிரம் கூட வரவில்லை…. நிலவு காட்டி பொய் உணவு ஊட்டி தூங்க வைக்க எண்ணினேன் 

நிலவும் ஏனோ வரவில்லை…… 

மடி ஏந்தி யாசகம் கேட்டேன்…. 

என் முந்தானை ஓட்டை, காசு ஏனோ விலவில்லை……. 

உயிரை மாய்க்க எண்ணினேன் 

அவன் அம்மா குரல் விட வில்லை….. 

ஒரு பருக்கை உணவு வேண்டினேன் என் கதறல் மொழி யாருக்கும் கேட்க வில்லை “என்ற அந்த அம்மாவின் குரல் இலையை நிலைகுலைய செய்தது. பேச மொழி இன்றி மன துயரோடு அவ்விடம் விட்டு சென்றது. தண்ணீரும் விலை போனது உயிரும் விலை போனது….. ஆனால் கண்ணீர் மட்டும் நிலையானதுஎன்ற எண்ண ஓட்டம் இலையின் மனதில் ஓடி கொண்டிருந்தது.

               நாட்கள் மெல்ல ஓடின ஒவ்வொரு விடியலும் பல வித அனுபவங்களை இலைக்கு எடுத்துரைத்தது. அன்று இரவு இங்கேயே இந்த பாறையின் மீது ஓய்வெடுப்போம் என்று எண்ணி அமர்ந்தது. அது ஓர் எழில் கொஞ்சும் ஓர் அழகிய காடு…… அந்தி மலர் வாசம், மூங்கிலின் புல்லாங்குழல் இசை என காடு மிளிர்ந்தது. திடிரென ஓர் சலசலப்பு, இலை என்ன சப்தம் என பார்த்தது,

வண்ண மலர்களுக்கு இடையில் 

தேனீக்கள் தேனாடை என உதட்டை சுற்ற…. 

பனித்துளி புல்நுனி என இடை வருடி குழியில் விழ….. 

வானெங்கும் உயர்ந்த மலை 

அவள் மார்பழகை கண்டு பொறாமை கொள்ள…… 

சப்த நாதங்களும் அவள் காற்கொழுசொலியில் ஒலிக்க…… 

பட்டுபோன மரம் அவள் பாதம் பட்டு பூத்து குழுங்க…. 

அவள் புன் சிரிப்பில் சூரியன் உதித்து விட்டது 

என தாமரை மலர்கள் பூக்க…. 

தேவலோக பெண்ணொருத்தி தேனிலவாய் அங்கே வந்தால். அவள் வந்த பிறகும் சப்தம் நிற்க்கவில்லை, சற்று நேரத்தில் வீரம் பொருந்திய தோள்களை கொண்ட ஆண்மகனும் வந்தான். அந்த இலையின் கண்ணோட்டத்தில் அவன் பார்ப்பதற்கு, பல போர்களை கண்ட வீரன் போலும், மனதால் குழந்தை யாகவும் காட்சி தந்தான். ஆனாலும் எதையோ பறிகொடுத்த தவிப்பும் எதையோ வேண்டும் ஏக்கமும் கண்ணில் தெறியவே இவர்கள் ஈருடல் ஓர் உயிராய் இணைந்த காதலர்கள் என்பதை புரிந்து கொண்டது இலை. இவன் அவள் கரம் பற்றினான் 

மவுனம் சாதித்தார்கள்…. 

கண்ணிலே பேசி காதல் கொண்டார்கள்…. 

தன்னிலை மறந்து இதழை பதித்தார்கள்…..

ஓடும் ஓடையில் கால்கள் பிசைய கிசு கிசுத்தார்கள்….. 

அவள் இடை அணைத்து மார்போடு சாய்த்து…… 

காலமெல்லாம் காதலில் வாழ 

ஓர் உயிராய் காற்றோடு கரைந்தார்கள்…. 

இதையெல்லாம் கண்ட இலை நாணம் தாங்காமல் மயக்க நிலையில் அவ்விடம் விட்டு சென்றது. 

பயணம் நீடித்தது, இலை ஓர் இடத்தில் தன்னை அறியாமல் நின்றது. “நான் ஏன் இப்போது இங்கு நின்றேன்” விடை அறியாமல் தவித்த இலையின் கண்களுக்குஓர் கருவுற்ற தாய் மரத்தடியில் அமர்ந்திருப்பது தெரிந்தது. தான் தாய்மை அடைந்ததை எண்ணியும், தன் பிள்ளை பற்றியும் பலவாறு எண்ணி கொண்டு புன்னகை பூத்திருந்தாள் அந்த பெண்மணி. 

“அம்மா என்பான்… 

மடி தவலுவான்…… 

ஆசை முத்தம்கேட்பான்……..

ஆராரொ பாட சொல்லி மழலை மொழி அழுவான்….

மண் தின்பான்…. 

மறைத்தே நடிப்பான்….. 

நிலா சோறு உண்பான்…. 

புன் முறுவல் பூப்பான்…. 

மடிசாய்ந்து அவன் சோர்வை நீப்பான்…. ” 

                                      என்ற பல கனவுகளோடு தன் பிள்ளை பாதம் படும் தினம் நோக்கி காத்து கிடந்தாள்…. இதில் மனம் இழந்த இலை ஆனந்த கண்ணீர் சிந்தி அவ்விடம் விட்டு நகர்ந்தது. 

 

                இப்படி புது புது அனுபுவங்களை  எண்ணிக் கொண்டே இலை சென்று கொண்டிருந்தது .கடும் வெப்பம், பூமி வெடித்து வறண்டு கிடந்தது. சொட்டும் அந்த மழை துளி கூட பூமி அடையும் முன்பே ஆவியாய் போனது. இதை கண்ட இலை “ஏன் இந்த இடம் இவ்வளவு வெப்பமாகவும் வறண்டும் கிடக்கிறது” என்று எண்ணி கொண்டிருக்க, பதில் அளிக்கும் வகையில் ஓர் வயதான விவசாயின் அழு குரல் கேட்டது.

 ” மேகமும் கருக்க வில்லை…..

பஞ்சமும் தீர வில்லை…. 

பட்னி போக வில்லை ….

ஒரு நெல் மணி கூட எம் மண்ணில் விளையவில்லை…… 

ஆனால் எம்மண்ணோ மலடு இல்லை…. 

உணவூட்டிய அன்னையை மலடாக்கிய பாவி, மானிடனே பொய் இல்லை…. 

மணலை அள்ளினோம் மாடி வீட்டை கட்டினோம் இன்னும் பேராசை மறைய வில்லை…. 

மண்ணும் போனது என் கண்ணீரும் வற்றியது நான் வாழ்வதில் பொருள் இல்லை ” இந்த கதறல் மொழி இலையின் பயணத்தில் கடக்க முடியா கடினமான பாதையானது. ( இன்பமோ துன்பமோ அனைத்தையும் கடந்து செல்வதே வாழ்க்கை).     இதுவும் கடந்து தான் போகும் என்றவாறு அவ்விடம் நீங்கியது. அடுத்த நாள் காற்றுடன் பலத்த மழை, நெடு நேர பயணத்திற்குப் பிறகு இலை மனிதன் புனிதம் கொள்ளும் இடத்திற்கு வந்தது. அங்கே மக்கள் குழுமியிருந்தனர், கண்ணில் நீர் வழிய, அழுகையும் துயரும் ஆட்கொள்ள வேதனையில் வீற்றிருந்தனர். “இதென்ன இங்கே இவ்வளவு கூட்டம், இன்பம் என்பதே இங்கு இல்லையே…. அழுகையும் சோகமும் நிறைந்து காணபடுகிறதே…..” என்று என்னியவாரு உற்று நோக்கி கொண்டிருந்தது அந்த இலை. அப்பொழுது அங்கே ஒரு பாட்டியின் ஒப்பாரி கேட்டது. 

எதுவும் நிஜம் இல்லை, நிரந்தரமும் இல்லை என்ற உண்மையை புரிந்திடு மானுடா…. 

சாதியும் மதமும் வாழ வைப்பது இல்லை சிந்தித்து செயலாற்ற மானுடா… 

ஆண் பெண் என்பது இறப்பிற்கு தெரியாது அறியாமையில் வாழாதே மானுடா…… 

உண்ணும் உணவு அனைவருக்கும் உரித்தே, அதை தட்டி பறிக்காதே மானுடா……. 

அம்மா அப்பா, பொண்டாட்டி பிள்ளைகள் இடுகாடு வரைதான் மறவாதே, மானுடா……. 

ஆறடியே உனக்கானது அதை உணர்ந்திடு மானுடா…… 

‌நீ கொடுத்த அன்பும் பதித்த பாதமும் உன் நினைவாய் இங்கு வாழும், அதுவே நிஜமும் நிரந்தரமும் மானுடா….. ” இந்த பாடலின் வரிகள் இலையின் எண்ணங்களை பலவாறு சிந்திக்க செய்தது.” நாம் வாழ்வதில் அர்த்தம் என்பது வேண்டும் என்றால், நாம் இல்லை எனினும் இவ்வுலகில் வாழ்வதே ” என்று எண்ணி வாழ்வின் அர்த்தம் புரிந்து அவ்விடம் விட்டு சென்றது. 

தென்றல் அமைதி காத்தது, ஆம் இலையின் பயணம் முடிவை எட்டியது. இன்பம் துன்பம், நன்மை தீமை, காதல் என அனைத்தையும் கண்ட இலை பேரானந்தத்தோடு தன் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தது. மாலை வெய்யில் வான் சூல, பட்சிகள் தன் இல்லம் சென்று தஞ்சம் அடைய, அன்னைவிட்டு பிரிந்த இலை மண்மீது தஞ்சம் அடைந்தது. சருகாய் உயிருக்கு உரமானது. மரணிக்கும் தருவாயில் 

” மனித வாழ்வோ இல்லை என்னை போன்ற இலையோ, வாழ்வென்பது ஒரு பயனமே, முடிவு என்பது உறுதி ஆனால் அது எப்பொழுது நிகழும் என்பது யாரும் அறியாத ஒன்று, சொல்ல போனால் வாழ்வென்பது ஓர் அழகிய காவியம். அந்த காவிய, காலம் மறைய புத்தகத்தை  காதலாலும் இன்பத்தாலும் கொண்டு நிறப்பலாமே…………. வாழ்க்கை என்பது ஒரு முறைதான்…. வாழபோவதும் சில நொடி தான். மறைந்தாலும் நினைவால் வாழ்வோம் பிறர் இன்பத்தில் சொர்க்கம் காண்போம்” என்றே உயிர்நீத்தது. 

எழுத்தாளர் – யான்தமிழன்

23 Comments

  1. Semma….nala karapanai oda nijathaiyum kalanthu alaganah kathai ya mathirukeenga ..innum ithae mari neraya elutha valtukal

  2. மறந்ததே உள்ளம்
    மறைந்ததே வெள்ளமாய் என
    மனதை கொள்ளையடிக்கும் உந்தன் வண்ணமிகு வரிகள் என்றென்றும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!