பெண்களுக்கும் மனது உண்டு

பெண்களுக்கும் மனது உண்டு
எழுத்தாளர் – வை.திருமூர்த்தி

    மோகன் 25 வயதான கல்லூரி முடித்த மாணவன். நல்ல உயரம், பரந்த தோள்பட்டை, நன்கு சீவிய கருமை தலைமுடி, கவரும் கண்கள் மற்றும் மாநிறம் கொண்ட அந்த இளைஞன் கடந்த 8 மாதமாக தன் ஒருதலை (One Side Love) காதலி சித்ராவின் பின்னே சுற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    சித்ரா 23 வயது நிரம்பிய ஓர் அழகிய இளம்பெண். நோயுற்ற தந்தை, வீட்டு வேலைக்கு செல்லும் தாய் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் தன் தம்பியுடன் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்தான் சித்ரா.
    தனது தந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோயால் சித்ரா தன் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உண்டானது. தன் கனவுகளை முற்றிலும் இழந்துவிட்ட சித்ராவின் ஒரே இலட்சியம் அவளது தம்பியை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்குவதுதான். இந்த லட்சியத்தோடு பயணிக்கும் சித்ராவின் வாழ்க்கையில் அவளுக்கென எந்த ஆசைகளும் இல்லை. எனவே சித்ரா தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தாள்.

    சித்ரா வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர் தான் மோகன். சித்ராவின் தலைகுனிந்த பண்பும், அடக்கமும் மோகனை சித்ராவின் மீது மோகம் கொள்ள வைத்தது. காலப்போக்கில் இந்த மோகம் காதலாக மாறியது. மோகன் சித்ராவிடம் தன் காதலை சொல்ல, சித்ரா அதனை மறுத்துவிட்டார். எனினும் மோகன் விடாமல் அவளுக்கு காதல் தொல்லை கொடுத்துக் கொண்டே வந்தார். சித்ரா எங்கே சென்றாலும் அவர் பின்னாலேயே செல்வது, அவ்வப்போது “சித்ரா எப்பொழுது எனக்கு OK சொல்வாய்..?” என்று கேட்பது, “என்ன சொல்ல போகிறாய்…?” என பாடுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் வயது கோளாறு காரணமாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் மோகன். சினிமாவில் நாயகன் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிப்பது போல தொடர்ந்து சித்ராவை தொந்தரவு செய்து கொண்டே வந்தார் மோகன்.

    மோகன் தன்னுடன் வேலைசெய்பவர் என்பதால் சித்ரா தனது கைப்பேசி எண்ணை (Phone Number) அவருக்கு தந்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. வேலை சம்மந்தப்பட்ட தகவல்களை பரிமாற மட்டுமே சித்ரா தனது கைப்பேசி எண்ணை வழங்கினார். ஆனால் மோகன் இதனை காரணமாக வைத்துக்கொண்டு தினமும்தொலைப்பேசி மூலமாக காதல் வார்த்தைகளை பேசி வந்தார். சித்ரா ஏதேனும் வேலை சம்மந்தமாக பேச Call செய்தால் மோகன்
“எப்ப டார்லிங் மாமாவ கல்யாணம் பண்ணிக்க போற..?” என்று கேட்பார்.
    இரவு நேரங்களில் காதல் செய்திகளை அனுப்புவது, அந்த SMS –க்கு சித்ரா பதிலளிக்காவிட்டால் இரவு நேரம் என்று கூட பார்க்காமல் Call செய்வது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். மோகனின் கைப்பேசி எண்ணை சித்ராவால் தடுக்க (Block) முடியவில்லை காரணம் அவ்வப்போது வேலை சம்மந்தமாக மோகனுக்கு சித்ரா போன் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. தன் மேலதிகாரியிடம் சொன்னால் தன்னை தவறாக நினைத்துக் கொண்டு வேலையை விட்டு நீக்கி விடுவார்களோ என்னும் பயத்தில் மோகனின் தொல்லைகளை கண்டும் காணாதது போல அமைதியாக பொறுத்துக் கொண்டிருந்தார் சித்ரா. மோகன் தனக்கு கொடுக்கும் காதல் தொல்லையை வீட்டில் சொன்னால் அம்மா அப்பா மிகவும் பயப்படுவார்கள் என்பதால் அத்தனை வலிகளையும் தன் மனதிற்குள்ளேயே வைத்து அவதிப்பட்டு வந்தாள் சித்ரா. என்ன செய்வது எந்த தவறு நேர்ந்தாலும்
“அவன் ஆம்பள பைய அப்படிதான் இருப்பான்….
பொம்பள புள்ள நீ இடம்கொடுக்காமயா அவன் இப்படி நடந்துக்குறா…?”
அப்படினு சொல்ற சமூகத்துல தானே நாம வாழ்ந்துட்டு இருக்கோம். ஆண்களில் பலர் இதே தவறை தான் இன்னமும் செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த தவறு பெண்களை எவ்வளவு பாதிக்கும் என சற்றும் சிந்திப்பதே இல்லை. பெண்கள் அவர்களுக்கு பிடிக்காமல் விலகி போவதை மௌனம் சம்மதம் என தங்களுக்கு தாங்களே ஒரு கோட்பாட்டை உருவாக்கிக்கொண்டு பெண்களை தொல்லை செய்துக்கொண்டே இருக்கும் ஆண்கள் அதிகம்.

    ஒரு கட்டத்தில் மோகன் சித்ராவை தனிமையில் மறித்து என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என அதட்டி சித்ராவின் கையை பிடித்துக்கொண்டு விடவே இல்லை. பயமும் கோபமும் உச்சக் கட்டத்தை அடைய சித்ரா பளாரென மோகனை அரைந்தார். மோகனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
சித்ரா சிவந்த கண்களில் கண்ணீர் பெருக்குடன்…

“ஏன் என்னை இப்படி தொல்லை செய்கிறீர்கள்..?

நீங்கள் ஒரு ஆணாக இருப்பதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா.?…

என் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் நான் இங்கு கஷ்டப்பட்டு வேலைப் பார்த்து வருகிறேன். இல்லையென்றால் உங்கள் தொல்லையை தாங்கமுடியாமல் என்றோ வேலையை விட்டு நின்றிருப்பேன். நான் என் தம்பியை நல்லா படிக்க வைக்கனும், அம்மாவை உக்கார வச்சு சோறு போடனும், எங்க அப்பா ஓட மருத்துவ செலவ பாக்கனும். இது தான் எனக்கு ரொம்ப முக்கியம். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ..?

என்னோட மனசுல வேற எந்த ஆசைக்கும் இடமே இல்லை. தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க. எனக்கு ஏற்பட்ட நிலைமை உங்க அக்காக்கோ இல்ல தங்கச்சிக்கோ நடந்திருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்…?
கட்டாயப்படுத்தி எதையும் ஒரு பொண்ணுகிட்ட வாங்கிடலானு நினைக்காதீங்க…? எங்களுக்கும் மனசு இருக்கு…. அதுல வலிகள் நிறைய இருக்கு…!
பொண்ணுங்கள புரிந்துக்கொள்ள முயற்சி பண்ணுங்க….அதுவும் இல்லாம இப்படி கேவலமா நடந்துக்குவீங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவே இல்லை….” என கண்டப்படி திட்டிவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார் சித்ரா.

    மோகன் தன் தவறை உணர்ந்தான். ஒரு பெண்ணை எவ்வளவு காதலித்தாலும் இனி ஒரு போதும் கட்டாயப்படுத்தி என்னை காதல் செய் என தொல்லை கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது காதல் அல்ல என புரிந்துக்கொண்டான். அடுத்த நாளிலிருந்து மோகன் சித்ராவிடம் எந்த தொல்லையும் செய்யாமல் மரியாதையுடன் நடந்துக்கொள்ள துவங்கினான்.
    மோகன் போல அனைத்து ஆண்களும் அவர்களை மாற்றிக்கொண்டு, பெண்களுக்கு உண்டான மரியாதையை வழங்கினால், நாம் வாழும் இந்த பூலோகமே பெண்களுக்கு சொர்கலோகம் தான்…!

பெண்களை மதிப்போம்……! பெண்ணியம் போற்றுவோம்……!
எழுத்தாளர் – வை.திருமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!