அப்பா உன் அன்புத்திருடி நான்

அப்பா உன் அன்புத்திருடி நான்
எழுத்தாளர் – சின்ட்ரெல்லா
    இந்த நாள் எனக்கு மிகவும் சந்தோசமான நாள். என் அப்பா ஊரில் இருந்து வருவதாக அம்மா சொன்னாள். ஆவலோடு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறேன் என் அப்பாவின் நடையோசையை எதிர்நோக்கி .

     திடீரென ஒரு ஓசை என் காதில் விழுந்தது. அது எனக்கு பழக்கப் பட்ட ஓசை தான். ஆமாம், அது என் அப்பாவின் நடையோசை தான்.அவரை பார்க்கும் ஆவலோடு “என் அப்பா”.

    வந்து விட்டார் என்று கூறிக்கொண்டே அவர் முகம் நோக்கி ஓடினேன். வந்து விட்டார் என் அப்பா.அவரை பார்த்ததும் எனக்கு எவ்வளவு சந்தோசம் இருந்ததோ அதே சந்தோசம் அவர் முகத்திலும் இருந்தது. அது எனக்கு தெரிந்தது. கைகளில் பல பைகளுடன் ஒட்ட உயரமாக என் அப்பா புன்னகையுடன் நடந்து வந்தார். படபடவென அடித்த என் மனது அவர் என்னை அழைத்து “என் செல்லமே“ என்ற வார்த்தையில் சுக்குநூறாக போய் விட்டேன்.

    ஓடி சென்று அவரை கட்டி அரவணைத்து கொண்டேன் அவர் முத்த மழைகள் பொழிந்தார். உலகமே ஒரு நொடி நின்றதென உணர்ந்தேன். கண்களில் நெகிழ்ச்சிக் கண்ணீருடன் அப்பா எனக்கு என்ன வாங்கிட்டு வந்துருகிங்க? என்று கேட்டவுடன் பை நிறைய சாக்லேட்டுகள், மிட்டாய்கள், பொம்மைகள் என பல பொருட்களை காட்டி எல்லாம் உனக்கு
தாண்டா செல்லம் என்றார்.

    இது மட்டும் இல்லாம உனக்கு ஒரு Surprise Gift.பிரித்து பார் உனக்கு ரொம்ப பிடிக்கும். பிரித்தவுடன் hyyyy சின்ட்ரெல்லா பொம்மை. நான் நிறைய கடைகளில் கேட்டும் கிடைக்காத பொம்மை உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது? என்று கண்களில் நீர் ததும்ப கேட்டுக் கொண்டே என் அப்பாவை அனைத்துக் கொண்டேன். இப்பொழுது என்னுடைய முறை நான் முத்த மழையை பொழிந்தேன் என் அப்பாவின் மீது.

    அதன் பின் அப்பா என்ன விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க என்னோடவே இருங்க அப்பா……… நான் காலேஜ் போய் விட்டு வந்து விடுகிறேன் .உங்களிடம் பேச நிறைய உள்ளது. 

இன்று எனக்கு முதல் நாள் காலேஜ் வகுப்பு!!

    காலேஜ் முடிந்து வந்த பின் நான் அப்பாவிடம் சென்று இன்னைக்கு இதெல்லாம் நடந்தது அப்பா…… என்னை Intro குடுக்க சொன்னாங்க……. நான் கொஞ்ச பயந்துட்டே என்ன பத்தி சொன்னேன்………. 

    அப்புறம் தோழி ஒருத்தி கிடைத்தாள்……… என்று சொல்லிக்கொண்டே இருந்ததில் இரவு கழிந்து விட்டது.அவரும் நான் சொல்வதை ரசித்துக் கேட்டுக் கொண்டே இருந்தார்.

    20 வயது ஆகியும் நான் அந்த சின்ட்ரெல்லா பொம்மையின் மோகத்தில் இன்னும் குட்டி குழந்தையாகவே இருப்பதை உணர்ந்தேன்………

    அடுத்த நாள் என்னை Shopping கூட்டிச் சென்று இன்னும் நிறைய பொருட்கள் வாங்கி கொடுத்தார் என் அப்பா …… 

பக்கத்து வீட்டுக்கு போயி “ என் அப்பா சாக்லேட் வாங்கி வந்தார்……… நீங்களும் எடுத்துக்கோங்க” என்று சந்தோசத்துடன் அனைவருக்கும் சாக்லேட்டுகளை கொடுத்தேன்.

இரவு பகலாக பேசிக்கொண்டே இருக்கும் எனக்கும் என் அப்பாக்கும் வாய் வலிக்கவே இல்லை. நிறைய பேசினோம்…….

நான் முதல் மதிப்பெண் எடுத்த தருணம் ……..
நான் கட்டுரை போட்டிகளில் வாங்கிய பரிசு ………
நான் எழுதிய முதல் கவிதை ……..
அனைத்தும் உரையாடல்களாய் அமைந்தன………..

நாட்கள் வேகமாக சென்றன.

    அப்பாவிடம் சென்று எனக்கு சுற்றுலா போகனும்னு ஆசையா இருக்குப்பா கூட்டிட்டு போங்க அப்பா. நாம குடும்பதோட சேர்ந்து போலாம்னு சொன்னேன். ”சரிம்மா” என்று என் அப்பாவின் வாயில் வந்த வார்த்தையில் நான் சொர்கத்திற்கே சென்று வந்ததை உணர்ந்தேன். சந்தோஷத்தில் மிதந்தேன்.

    என்னிடம் இருந்த சின்ட்ரெல்லா பொம்மையும் சுற்றுலா செல்வதற்கான Train டிக்கெட்டை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையில் என் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு ………

அப்பா அம்மாவை கூப்பிடுங்க………..
நாம கிளம்பலாம்…… Train –க்கு நேரமாச்சு…… என்று ஆனந்தத்தில் குதித்துக்
கொண்டிருந்தேன்.

அம்மா…………சீக்கிரம் வா…………போலாம்………..

என்ன சாமி! கனவு கண்டியா?  நேரமாச்சு …….. விடுஞ்சிருச்சு….
காலேஜ்-க்கு கிளம்பனும் எந்திரி ……. என்ற என் அம்மாவின் குரல்.

எழுந்து பார்த்தேன். எனது கையில் சின்ட்ரெல்லா பொம்மையும் இல்லை. Train டிக்கெட்டும் இல்லை. மறு கையில் என் அப்பாவும் இல்லை.

வருத்ததுடன்…….. இன்றும் நான் கண்டது கனவா?
என் அப்பாதான் இறந்து விட்டாரே……. எப்படி வந்திருப்பார்…….. என்று யோசிக்கத் தொடங்கினேன்.

மனதிற்குள் “அப்பா……. உங்களிடம் சொல்வதற்கு இன்னும் ஒன்று இருக்கிறது.”

    உங்களை எனக்குப் பிடிக்காது. காரணம், நீங்கள் உயிருடன் இருக்கும் தருணத்தில் என்னிடம் அன்பாக பேசியதில்லை. உங்களின் சுண்டு விரலை கூட நான் பிடித்து இல்லை.ஆனால், ஆசையாக இருக்கிறது. உங்கள் சுண்டு விரலை பிடிக்க வேண்டும். கட்டி அனைத்து அழுகனும். உங்களை எவ்வளவு Miss பண்றேன்னு உங்கள்ட்ட சொல்லனும். ஆனால், உங்களை ஏதோ ஒரு பத்து முறை பார்த்ததாய் எனக்கு ஞாபகம். உங்கள் முகம் கூட மறந்து விட்டது அப்பா.

நிஜத்தில் கூட நடக்காத இது போன்ற நிகழ்வுகளை நான் எனது ஒரு மணி நேர கனவில் உணர்ந்து கொள்வேன்…….

அப்பா எப்படி எனது ராஜ தந்திரம் !

யாருக்காவது கிடைக்குமா…….. எனக்கு மட்டுமே கிடைத்த இந்த வரம் இது……

கனவில் நான் கண்ட சின்ட்ரெல்லா பொம்மை, Train டிக்கெட், அப்புறம் நீங்க, உங்களிடம் பேசிய தருணங்கள் ……..
இவையெல்லாம் இல்லாமல் போகலாம் நிஜத்தில்……..

ஆனால், அந்த ஒரு மணி நேரம் நான் உங்கள் அன்பை அனுபவித்த தருணங்களை, அந்த உணர்வுகளை நீங்கள் என்னிடம் இருந்து எடுக்க முடியாது.

அப்பா……..

உங்களை விடப் பெரிய இராஜதந்திரி நான்……..
உன் அன்புத்திருடி நான்…………
உன் சுண்டு விரலை தொட்ட அதே உணர்வுடன் பல மணி நேரம் தூங்குகிறேன்……. அந்த ஒரு மணி நேர மறு கனவுக்காக …………

(நிஜத்தில் நடக்காத பல பேரின் ஆசைகள் கனவிலேயே அரங்கேறுகின்றன….. உணர்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வதற்காக)

நிஜத்தில் நீங்கள் கொடுக்காத உங்களின் அன்பை என் கனவில் உன்னிடமிருந்து பறித்துக் கொள்வேன் உங்களின் அனுமதியின்றியே……..

“உன் அன்புத்திருடி நான்!!!”
எழுத்தாளர் – சின்ட்ரெல்லா

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!